Friday, January 6, 2012

எஸ்.எம்.எ.ஹஸன் எழுதிய இக்பால் ஓர் அறிமுகம் என்ற நூலுக்கான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் எழுதிய அணிந்துரை


எஸ்.எம்.எ.ஹஸன் எழுதிய இக்பால் ஓர் அறிமுகம் என்ற நூலுக்கான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் எழுதிய அணிந்துரை

'அல்லாமா இக்பால் நம் காலத்திற்குரியர், நம் காலத்திற்கு உரிய செய்திகளை தந்தவர்.' என்ற அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸின் கூற்று அல்லாமா இக்பால் பற்றிய உயர்ந்த மதிப்பீடாகும். இவ்வுலகில் முன்னேற்றத்திற்கு இஸ்லாம் கூறக்கூடிய செய்திகள் எதுவும் இல்லையா என்று முஸ்லிம் அறிவுலகம் துவண்டு கிடந்த போது இக்பாலின் கீதங்கள் கேட்டன. நாம் புத்துணர்ச்சியடைந்தோம். என்று ஏ.எம்.ஏ.அஸீஸ் மற்றோரிடத்தில் இக்பாலின் சிந்தனையின் காலத்திற்கேற்ற தன்மையை வியந்து கூறினார். 
புதிய உலக சிந்தனைக்கு ஏற்ப இஸ்லாத்தை புதிய கண்ணோக்கில் விவரிக்கும் பேராற்றல் இக்பாலுக்கு இருந்தது. ஏற்கனவே இதற்கான முற்சிந்தனைகள் ஆப்கானி,அப்தூ, செர் செய்யித் அகமத்கான், போன்றோரினால் முன்வைக்கப்பட்டிருந்தது. உண்மையே யாயினும். தற்கால உலக சிந்தனைப்பயிற்சியுடனும் மேற்கையும், கிழக்கையும் காழ்புணர்வின்றி அறிவு ரீதியாகச் சீர்;தூக்கிப்பார்க்கும்  முதிர்ச்சியும், மேற்கின் சிந்தனை, கலாசாரம் பற்றிய ஆழமான கண்ணோக்குமுள்ள ஒரு மணிதனின் தேவை நிறைவேற்றப்படவேண்டியிருந்தது. இக்பால் அந்தத் தேவையின் பூர்த்தியாகும்.
இக்பால் இன்னும் படிக்கப்படவேண்டிய நூல், உலகையும், வாழ்வையும், மனிதனையும், சமயத்தையும், விஞ்ஞானத்தையும் புதிய நோக்கில்  இஸ்லாமியப்பண்பாட்டின் உண்மையான ஊற்றுக்களிலிருந்து எடுத்துச்செல்லும் அவரது பண்முகச்சிந்தனைப்பரப்புக்கள்  போதுமானவரை இன்னும் படிக்கப்படவில்லை. இக்பால் விளக்கியவற்றுக்கும் நுணுக்கமாகச்சொல்லிச் சென்றவற்றுக்கும் இன்று விளக்கமும், மறுவிளக்கமும் தேவையாக உள்ளன. அவர் எல்லாவற்றையும் சொன்னவரல்ல. ஆனால் முன்னேற்றம், மாற்றம், சாதாரண, புதிய பார்வை, இயற்கையை வெல்லும் மனித ஆற்றல் பற்றி முஸ்லிம் சமூகம் கற்றுணர வேண்டிய கருத்துக்களால் இக்பாலின் கவிதைகள் நிரம்பியுள்ளன. 
இக்பாலின் சிந்தனைகளை நோக்கி உலகின் பார்வை மீண்டும் திரும்புகின்றது.  ஆசிய மக்களின் எழுச்சிக்கு அவரது சிந்தனைகள் தரும் தூண்டுதல்கள் என்னவென்பது பற்றி அறிய அறிவுலகம் ஆவலாக உள்ளது. 
இலங்கையிலும் இக்பாலின் சிந்தனைகள் பற்றிய ஆர்வம் மீளத்துளிர்க்கும் நிலையை அவதானிக்க முடிகிறது. ஆதன் ஒரு வெளிப்பாடாக பன்னூலாசிரியர் எஸ்.எம்.ஏ.ஹஸன் அவர்களின் இந்நூலைக்குறிப்பிடலாம். இக்பாலின் சிந்தனைகள் இலங்கையில் ஸ்தம்பிதம் அடைந்து சில தசாப்தங்களின் பின்னர் வெளிவரும் ஆக்கபூர்வமான நூல் என்ற வகையில் இந்நூலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
இக்பாலின் வாழ்வையும், சிந்தனைகளையும் ஒரே பார்வையில் தரக்கூடியதாக இலங்கையில் எழுதப்பட்ட முதல் நூல் என்றும் இதனைக்குறிப்பிடலாம். எளிமையும், இலக்கிய நயமும் பொருந்திய இக்பால் கவிதைகளின் புதிய மொழிபெயர்ப்புக்கள் இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும். 
இளைஞர்களின் சிந்தனைகளுக்கு அல்லாமா இக்பாலின் சிந்தனைகள் விருந்தாக வேணடும் என்பது நூலாசிரியர் ஹஸன் அவர்களின் அவாவாகும். நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல அல்லாமா இக்பாலின் கவிதைகள் அழகுணர்ச்சியை மட்டும் தருவதல்ல மனித வாழ்க்கை தத்துவங்களையும் எடுத்துரைப்பனவாகும். 
இக்பாலின் புதிய உலகைக் கான விரும்பினார். தற்கால முன்னேற்றத்திற்கு தடையான பழைமை வாதங்களை அவர் தகர்க்க முற்பட்டார். இக்பாலை கற்க விரும்பும் ஒருவர் மனதிற் கொண்டிருக்கவேண்டிய  முதல் ஆதார எடுகோள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.  புதிய உலகமும் சமுதாய மாற்றமும் என்ற பார்வையினாலன்றி இக்பாலின் சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான சரியான மார்க்கம் வேறு இருப்பதாக தெரியவில்லை.
குறுகிய நோக்கிலான சடங்காசாரம் பற்றிய மயிர் பிளக்கும் விவாதங்களைக்கடந்து செல்ல முஸ்லிம் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தி தேவை. புதிய அறிவுப்பரப்புகளின் ராஜ பாட்டைகளில் எவ்வாறு பிரவேசிப்பது. ஏன்பதற்கு அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் அவசியமாக உள்ளது. கல்வியியல் நோக்கில் இஸ்லாத்தின் உண்மைகளை அறிவதற்கும், உலகளாவிய அதனை அரசியல் மற்றும் மனித மையவாத (ர்ரஅயnளைஅ)  இலட்சியங்களை உணர்வதற்கும், தற்காலத்தில் நமக்கு உதவக்கூடிய சிந்தனை வழிகாட்டுதல்கள் இக்பாலின் தத்துவங்களில் உள்ளன. 
இக்பால் மனிதனைப்பாடினார். மனித இருப்பும், மனித மேன்பாடும் பற்றிய கருத்துக்கள். அவரது கவிதைகளில் மீண்டும்,மீண்டும் எதிரொலிக்கின்றன. இக்பால் காண விரும்பிய புதிய உலகு என்பதன் பொருள்களில் ஒன்று 'பண்பாட்டில் மேம்பட்ட உயர்ந்த மனிதனின் வருகை பற்றியதாகும். இதனால் மனித மீட்சி அவரது சிந்தனையின் அடிநாதம் எனக்கூறலாம். 
அல்லாமா இக்பாலின் சிந்தனைகளின் ஆழமான பகுதிகளைச் சென்றடைய இத்தகைய அறிமுக நூல்கள்; சிறந்த வழிகாட்டிகளாகும். சாதாரண மக்கள் இக்பாலை அறிவதற்கு இத்தகைய நூல் வெளிவருவது அவசியமாகும். இதனால் எஸ்.எம்.ஏ ஹஸன் அவர்களின் இப்பணிக்கு ஒரு இலக்கிய முக்கியத்துவமும், சமூகப் பெருமானமும் உண்டு. 
அவர்களின் இலக்கிய பணியும், அறிவுப்பணியும் தொடர எமது நல்வாழ்த்துக்கள். 
முஸ்லிம் நாட்டாரியல் தேடலும் தேவையும். எனும் நூலுக்கான முன்னுரை. (பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்)

இந்த ஆக்கம் நாட்டாரியலில் முஸ்லிம்களின் பங்களிப்புக்களையும், முஸ்லிம்கள் தமது நாட்டார் மரபுகளிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவைகளையும் சுருக்கமாக சுட்டிக்காட்டுகிறது. அறபு நாடுகள் மற்றும் ஈரான், துருக்கி, பாக்கிஸ்தான், இந்தியாவின் வடமானிலங்கள் ஆகியவற்றை நோக்கினால் நாட்டார் கலைகள், நாட்டார் வழக்காற்றியல்களில்  அறிந்து கொள்ள வேண்டியவையும், முன்மாதிரியாக கொள்ள வேண்டியவையும் விரிவாகவும், ஆழமாகவும் அங்கு வேரூன்றி இருப்பதை உணர முடியும். இனத்துவம், நாகரீகம், சமயம், தொன்மம், என்ற பழம் மரபுகள் தொடங்கி 20ம் நூற்றாண்டிலும், அதற்குப்பின்னரும் மலர்ச்சி பெற்றுவரும் பல்வேறு புதிய அம்சங்களை உற்படுத்தியதாகவும், அவை நிலைபெற்றுள்ளன. ஆய்வு, மற்றும், பாதுகாப்பு, முயற்சிகளிலும், இந்த முஸ்லிம் நாடுகள் மிகவும் முன்னேற்றமான கொள்கைகளை வகுத்துச்செயல்படுத்தி வருவதையும் அவதானிக்க முடியும்.
முஸ்லிம் நாட்டாரியல் அதன் முழுமையான எல்லைகளையும், பரப்புக்களையும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலிருந்து நடைபெற்றிருப்பவை பற்றியும் இனங்காணப்படவேண்டிய வௌ;வேறு துறைகள் பற்றியும் கலந்துரையாடுவதற்கான தேவையை இந்நூல் சுட்டிக்காட்ட முயல்கிறது. 
நாட்டுப்புற வழக்குகள், நாட்டுப்புற பண்பாட்டு அம்சங்கள் ஏட்டில் ஏறாத பாடல்கள், கிராமிய கலைகள், நாட்டார் அறிவியல், சமயத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காலக்கணக்கீடுகள், அலங்கார வகைகள், உணவுப்பதார்த்தங்கள், ஆடைஅணிகளன்கள், கட்டடக்கலை, விழாக்கள் என்று விரிவான தளங்களில் இங்கு முஸ்லிம் நாட்டாரியலானது ஆய்வு, அறிமுகம், பாதுகாத்தல், என்ற இலக்குகளை அடையவில்லை இதனால் பல நாட்டாரியல் அம்சங்கள் மட்டுமல்ல பண்பாட்டு ஆவணப்படுத்தலுக்கும், பண்பாட்டு வேர்களை இனங்காண்பதற்குமான பல விடயங்களும் அழிந்து போய்விட்டன. 
நாட்டுப்புறவியல் அல்லது நாட்டாரியல், பெரும்பாலும் தமிழ் மரபில் நாடோடிக்கவிகளை அடையாளம் காண்பதிலிருந்து தான் ஆரம்பமாகியுள்ளது. முஸ்லிம்களின் நாட்டாரியல் நயப்பும், அறிவும், ஏட்டில் ஏறாத பாடல்களிலிருந்துதான் ஆரம்பமாகின. நாட்டாரியல், நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் என்று கருதுபவை  எண்னற்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளன.  நாட்டுப்புற பண்பாடு, வழக்காற்றியல்கள் தொடர்பான புதிய தேடல்களில் ஆய்வாளர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பரந்துபட்ட அதன் விடயப்பரப்பை அறிந்து கல்வி மற்றும் ஆய்வு முயற்சிகளாகவும் அறிமுகப்படுத்தல்களாகவும் தமிழ் நாட்டில் நாட்டாரியல் விரிவான எல்லைகளுக்குச் சென்றுள்ளது. 
இலங்கையில் வெளிவரும் மீள்பார்வை வார இதழில் முஸ்லிம் நாட்டாரியல் தேடலும்,தேவையும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையே இந்நூலுக்கான உந்துதலை உருவாக்கியது. மீள்பார்வை நிருவனத்தாருக்கு எனது நன்றிகள். புத்தளம் மாவட்டத்திலும்,ஏனைய சில பிரதேசங்களிலும் ஏற்கனவே நாட்டாரியல் தொடர்பில் நூலாசிரியர் செய்துவந்துள்ள சில ஆய்வுகள் இந்நூலாக்கத்திற்கு துணையாகவிருந்தன. அறபு உலகில் குறிப்பாக அறபு – முஸ்லிம் உலகில் நடைபெறும் நாட்டாரியல் ஆய்வுகள், தேடல்கள் பற்றிய இந்நூலிலுள்ள இயல் இந்நூலிற்காக புதிதாக எழுதப்பட்டுள்ளது.  தமிழில் எழுதப்படும் இது பற்றிய முதல் கட்டுரையாக இது இருக்கலாம். அறபு நாடுகள் வரை ஊடுருவி நிற்கும் இப்பிரதேச பண்பாட்டுத்தொடர்புகளை விரிவான தளங்களில் நோக்குவதற்கு இவ்வகை ஆய்வுகள் பக்க பலமாக இருக்க கூடியவை. 
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் சில ஆய்வுக்குறிப்புக்கள்.

அனஸ் அவர்கள் 07.03.1949 ம் ஆண்டு புத்தளத்திலுள்ள கற்பிட்டி பள்ளிவாயல் துறையில்  பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் முஹம்மது சாலிஹ், தாயின் பெயர் சரிபுன்னிஸா என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எம்.எஸ்.எம்.அனஸ், எம்.எஸ்.எம்.ஆரிப், என்போரே அவர்கள். அனஸ் அவர்களுடைய பண்பாட்டில் தந்தையான முஹம்மது சாலிஹ் அவர்களின் தாக்கம் சற்று அழுத்திக்கூறப்பட வேண்டியதாகும். அனஸ் அவர்களுடைய வாசிப்பு பின்புலத்தில் சாலிஹ் அவர்களுடைய பங்கு மிக மிக காத்திரமானது. எனக்கருதுகின்றேன். 
அனஸ்அவர்கள் சிறுவனாக இருக்கும் காலத்தில் அவருடைய தந்தை வாசிப்பு சூழலை ஏற்படுத்தினார் என மதிப்பீடு செய்கிறேன். சாலிஹ் அவர்கள் ஊர்பற்றுள்ளவர். ஊரென்றால் உயிரென்று செயற்பட்டவர். என அனஸ் அவர்கள் என்னிடம் நேரடியாகவே குறிப்பிட்டார். இந்த சிந்தனைகள்தான் முஸ்லிம் சமூகத்தின் மீதான பற்றுக்கும், அக்கறைக்கும் மிகமிக முக்கியமாக அமைந்திருக்கிறது எனக் கருதுகின்றேன். 
தற்கால இஸ்லாமிய சிந்தனை எனும் நூலில் அறிஞர் அலி ஷரி அத்தியின் கூற்றை அனஸ் அவர்கள் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் அந்த வசனத்தை இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 'சிந்திக்கும் கலையையும், மனிதனாக இருத்தல் என்ற உணர்வையும், தந்தையிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.' என்று அவர் கூறிய கூற்றை காட்டியிருப்பது அலி ஷரி அத்தி அவர்களுக்கு எவ்வாறான தந்தையோ அதே போன்ற ஒரு தந்தையாக முஹம்மது சாலிஹ் இருந்தார்கள் என்பது அழகாக காட்டுகிறது. முஹம்மது சாலிஹ் முஹம்மது அனஸ் என்று எழுதுவது அதனையே காட்டுகிறது. 
அனஸ் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தினையும், முதுமாணிப் பட்டத்தினையும், கலாநிதிப்பட்டத்தினையும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். அனஸ் அவர்களுடைய அறிவு ஆளுமையில் பெரும் செல்வாக்கு ஏற்படுத்தியவர்களாக பேராசிரியர்களான காசிநாதன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, சி.சிவசேகரம் போன்றோர் மிக முக்கியமானவர்கள். அனஸ் அவர்களுடைய கலாநிதிப்பட்ட மேற்பார்வையாளராக பேராசிரியர் சோ.கிருஸ்னராஜா என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யியல் துறையில் தோன்றிய பேராசிரியர்களுள் சோ.கிருஸ்னராஜா மிகமிக முக்கியமான ஒருவராவார். 
அனஸ் அவர்கள் இளமைக்காலம் முதல் வாசிப்பிலும், எழுத்திலும், பேச்சிலும், ஆர்வமாக செயற்பட்டுள்ளார் என்பதனை நேரடியாக ஊடாடியவன் என்ற அடிப்படையில் என்னுடைய உத்தேச மதிப்பீடாகும். பரீட்சைகளிலும், பேச்சுப்போட்டிகளிலும், முதலாம், இரண்டாம் இடங்களைப்பெறுபவராக இருந்து வந்தார். 
இவருடைய வாசிப்பு பழக்கம் 10 வது வயதில் ஆரம்பிக்கிறது. சிறுவனாக இருக்கும்போது புத்தகங்களை வைத்து வீடு கட்டியும், காரோடியும் புத்தகங்களுடனான உறவு ஆரம்பிக்கின்றது. வீட்டுச்சூழல் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. என்பதே எனது கருத்தாகும். கற்பிட்டி, புத்தளம், கொழும்பு சாஹிரா, பேராதனை. நூலகங்களை அனஸ் அவர்கள் நன்றாக பயன்படுத்தியுள்ளார். அனஸ் அவர்களுடைய மனைவியின் பெயர் முப்லிஹா, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அன்பாஸ், அஸ்மினாத் இவர்கள் தற்போது கனடாவில் வசிக்கின்றனர். 
அனஸ் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்றவர். கனடா, பிரித்தானியா, மலேசியா, ஈரான், இந்தியா, பல்கேரியா போன்ற நாடுகள் மிக முக்கியமானவை. இந்தியா, மலேசியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சொற்பொழிவாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ், ஆங்கிலம்,சிங்களம், போன்ற மொழிகளில் தேர்ச்சியுடையவர். இவருடைய வீட்டில் மிக சிறந்த நூல்களைக் கொண்ட நூலகம் உள்ளது. இது ஒரு சிறந்த ஆய்வுகூடமாகும். இவருக்கு பிடித்த நூல் நிலையங்களான கனடாவில் உள்ள ரொபட்ஸ் நூலகம், லன்டன் பல்கலைக்கழக நூலகம் என்பது சற்று அழுத்திச் சொல்லப்பட வேண்டியதாகும். ஓர் ஆய்வுக்கான அனைத்து நூல்களையும் ஒரே நூலகத்தில் பெறமுடியும் என்று கூறுவார். இலங்கையில் ஒட்டுமொத்தமாக பெற முடியாது. 
பேராசிரியர் அனஸ் அவர்கள் பல சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒருவராவார், அமைதியானவர், அகன்ற, ஆழமான அறிவுடையவர், சமூகப்பற்றுள்ளவர், அதிகமாக எழுதக்கூடியவர், அழகான முறையில் சொற்பொழிவாற்றக்கூடியவர். 
பேராசிரியர் அனஸ் அவர்கள் மெய்யியல் துறையில் சிறப்புத்தேர்ச்சி உடையவராயினும், இவரிடம் பல துறைகளிலும் சங்கம ஆய்வு (Multi Disciplinary Approach)  உள்ளதாக யான் கருதுகின்றேன். அவர் எழுதுகின்ற ஒவ்வொரு வகையான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தகங்களும்  அதனை மிகமிக தெளிவாக எடுத்து காட்டுகின்றன. அகன்ற அறிவினையும், ஆழமான ஆய்வினையும் மிகமிக துள்ளியமாக பார்க்க முடியும். 
ஆய்வு, பல்கலை சஞ்சிகைகளின் பிரதம ஆசிரியர். பல சஞ்சிகைகளுக்கு அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். ஒரு அஸீஸோ, ஒரு நுஃமானோ, ஒரு சுக்ரியோ, ஒரு அனஸ்ஸோ இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு போதாது. பலர் உருவாக்கப்படல் வேண்டும். என்பதே எனது ஆழமான சிந்தனையாகும். இது முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்காக விடப்படுகின்றன.  
அனஸ் அவர்களைப்பார்க்கும்போது ஒரு பாடல் வரி எனக்கு ஞாபகம் வருகின்றது. 'மனிதருள்ளே மனிதருண்டு வானவரும் மனிதராய் வருவதுண்டு' 
பேராசிரியர் அனஸ் அவர்கள் எழுதிய ஆய்வு நூல்களின் பட்டியல் கீழே தரப்படுகின்றன.
1. ஷேய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப்பார்வை
2. வரகவி ஷெய்கு அலாவுத்தீன்  
3. வாழ்வியலும் பண்பாடும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்
4. புத்தள பிரதேச புலவர்கள்
5. இலங்கையில் முஸ்லிம் நுண்கலை ஒர் விமர்சன ஆய்வு
6. ஈரானிய சினிமா சமய வாதங்களும், திரைப்படங்களும்
7. ஏ.எம்.ஏ.அஸீஸ் கல்விக்கொள்கையும், நவீனத்துவ சிந்தனைகளும்
8. இலங்கையில் இனக்கலவரங்களும், முஸ்லிம்களும்
9. எஸ்.எம்.ஏ.ஹஸன் தற்கால முஸ்லிம் சமூக பன்பாட்டியல் வரலாற்றில் ஓர் அத்தியாயம்
10. மெய்யியல் - கிரேக்க மெய்யியல் தற்காலம் வரை
11. எச்.எஸ் இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு
12. இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு 
13. முஸ்லிம் நாட்டாரியல் தேடலும், தேவையும்
14. ;புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும்,வாழ்வியலும்
15. அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ்;
16. விஞ்ஞானமும், சமூக விஞ்ஞானங்களும் ஒரு முறையியல் நோக்கு
17. ஏ.எம்.மதார் மரைக்காரின் அபிவிருத்தி பணிகளில் கல்வியும், சமூகமும்
18. அறிஞர் எம்.சீ.சித்திலெப்பை
19. ஜமாலுத்தீன் அல் ஆப்கானி
20. ஷெய்யிக் முஹம்மத் அப்துஹ்
21. ஸேர் செய்யித் அஹமத்கான்
22. இலங்கையில் இஸ்லாம் (செவ்விதாக்குனர்)
23. எஸ்.எம்.ஏ.ஹஸன் ஒரு பண்பாட்டுப்பயணம் (பதிப்பாசிரியர்)
24. ஷிக்வா (பதிப்பாசிரியர்)

உசாத்துணைகள்:
இந்த கட்டுரையாக்கத்திற்கு பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் உடனான உறவுகளும் செல்வாக்குச்செலுத்தியுள்ளன. இவருடைய எல்லா ஆய்வுநூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.





எ.எம்.எ.அஸீஸ் கல்விக்கொள்கையும், நவீனத்துவ சிந்தனைகளும். என்ற நூலுக்கு  பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் முன்னுரை

சமூக சேவைகளினாலும், சிந்தனையினாலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட்ட ஒரு சில முஸ்லிம் தலைவர்களில் ஏ.எம்.ஏ.அஸீஸ் இருபதாம் நூற்றாண்டின்  முக்கிய தலைவராவார். பல்வேறு மட்டங்களில் பரவிக்கிடந்த தேக்க நிலைகளையும், பிற்போக்கு மனோபாவத்தையும், யுக மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து வந்த சிந்தனைப் போக்குகளையும் எதிர்த்துப்போராட வேண்டிய தேவையும், சூழ்நிலையும் 19ம் நூற்றாண்டில் உருவாகியது. நவீன அறிவை வரவேற்றவாறு இஸ்லாமியச்சிந்தனைகளின் முற்போக்கான இலட்சியங்களை எடுத்துக்கூறும் அறிவுரீதியான இயக்கங்களின் காலமாக 19 ம் நூற்றாண்டு மாற்றமடைந்தது. இந்தியாவிலும்,சில முஸ்லிம் நாடுகளிலும் இந்த அறிவுக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கும் நவீன சிந்தனையாளர்களை இக்காலம் உருவாக்கியது. 
குறிப்பாக, இந்திய உபகண்டத்திலும், எகிப்திலும் 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பாதியில் நவீன கல்வி, நவீன அறிவுத்துறைகள் முற்போக்கான சிந்தனைகள் தொடர்பில் நிகழ்ந்த மாற்றங்களும், கிளர்ச்சிகளும் இலங்கை முஸ்லிம்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
இலங்கை முஸ்லிம்களின் நவீன கல்வி வரலாற்றின் பிரதான உந்து சக்தியாகவும், அதன் ஊற்றாகவும் இந்த தாக்கத்தை குறிப்பிட முடியும். எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒறாபி பாஸா இலங்கையில் முஸ்லிம்களின் நவீன கல்விக்கு தனது இலட்சியங்களையும், கருத்துக்களையும் பக்க பலமாக்கியதை தொடர்ந்து நவீன கல்விக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன இது ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.கடினமான இப்போராட்டங்களின் பின்னரே முஸ்லிம்களின் கல்விச் சாதனைகளின் பலா பலன்களை சமுகமும் தேசமும் பெறக்கூடிய சூழல் உருவாகியது.
அத்தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டத் தலைவராகவும் சிந்தனைவாதியாகவும் அஸீஸ் பரிணாமித்தார்.ஏறத்தாழ 1940களில் அஸீஸ் அடிப்படையில் வரலாற்று மாணவன். கல்வித் தேவைக்காகவும் அறிவு விருத்திக்காகவும் வரலாற்றுத் துறையில் குறிப்பாக இஸ்லாமிய நாகரிகம் உட்பட உலக நாகரிகங்கள் பற்றிய படிப்பில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். புதிய சிந்தனைகளோடு இஸ்லாமிய சிந்தனைகளையும் இணைத்து ஆராயும் கல்வியிலும் தனது ஆர்வத்தை அஸீஸ் வளர்த்துக் கொண்டார். நவீன உலகின் இஸ்லாமியரின் கல்வி நிலை என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சி அவரது வாழ் நாள் முழுக்க நீடித்திருந்தது. அதற்கான வாசிப்புக்களில் தன்னை நிரந்தரமாக ஈடுபடுத்தி வந்தார் அதனால் சிந்தனா ரீதியான போராட்டங்கள் ஐயத்திற்கு இடமின்றி அவர் முதலிடத்திலிருந்தார். முஸ்லிம்களின் பிற்போக்கு வாதங்களை தட்டிக்கேட்டும் தைரியத்தை பெற்றிருந்தவர்களிளும் அவர் முக்கிய இடத்தை வகித்தார். 
இஸ்லாமிய நோக்கிலிருந்து தமது கால பிரச்சினைகளை கலந்து ஆலோசிப்பதற்கான விடய தானங்கள் பல அவரது சிந்தனைகளில் ஒன்று கலந்திருந்தன. இதில் முஸ்லிம் கலாசாரத்தைப்பற்றிய அவரது கருத்துக்களும் உள்ளடக்கப்பட வேண்டும். முஸ்லிம் கலாசாரத்தை அதன் எல்லா பரிமாணங்களிலிருந்தும் அவர் பார்த்தார். இஸ்லாமிய நாகரீகத்தில் அவருக்கிருந்த ஆழமான அறிவு இதனை அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தது. முஸ்லிம்களுக்கான அரும்பொருட் காட்சியகம், இசை , ஓவியம், நாடகம், வானொலி, நவீன ஊடகங்கள் என்று முழுமையான கலாசார பண்புகளை சமூகத்தின் வளர்ச்சியில் ஒன்றிணைக்க அவர் பாடுபட்டார். இவை முஸ்லிம்களின் பண்பாட்டு மறு மலர்ச்சிக்காக அவர் எடுத்த உன்னத முயற்சிகளாகும். 
எல்லா விடயங்களிளும் அவர்வெற்றி அடையவில்லையாயின் புதிய தலைமுறையினரின் சிந்தனைக்கு என பல விடயங்களை அவர்விட்டுச்சென்றுள்ளார். இலங்கையில் இஸ்லாம் என்ற அவரது நூல் அவரது இந்த சிந்தனைகள் பலவற்றை முன்வைத்துள்ளது. அஸீஸ் பற்றிய தகுந்த அறிமுகமொன்றை பெற்று இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் இலங்கையில் இஸ்லாம் என்ற நூலையும் அடிப்படையாக கொள்ளலாம்.  
 பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் எழுதிய ஷெய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப்பார்வை என்ற நூலுக்கு பேராசிரியர் துறை மனோகரன் எழுதிய குறிப்புக்கள்

நவீன கலை இலக்கிய முயற்சிகளோடு பழையவற்றை பெருமைப்படுத்துவதும், அவற்றின் பாரம்பரிய ஊற்றுக்களை இனங்கண்டு கொள்ள முயல்வதும் பயனுள்ள இலக்கிய பங்களிப்பாகும். 
பொதுவாகக் கிராமியப்புலவர்கள் பற்றிச் சிந்திக்குமிடத்து அவர்களிடத்தே இயல்பாகவே சில பண்புகள் அமைந்திருப்பதை காணலாம். நாட்டாரிசை மரபுகள் அவர்களின் பாடல்களில் இயல்பாகவே துலங்கும். பல்வேறு நாடுகளிளும், பிரதேசங்களிளும் கிராமியப்புலவர்கள் பலர் தோன்றி மொழியையும், சமயத்தையும், பண்பாட்டையும் வளர்க்கப்பாடுபட்டுள்ளனர். 
புத்தளம் கல்பிட்டிப்பிரதேசமும் இதற்கு விதிவிலக்கன்று அங்குள்ள முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் புலவர்கள் தோன்றி தமது ஆளுமையையும், அறிவாற்றலையும் கிராம மக்கள் மத்தியில் மேலோங்கச்செய்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய மார்க்க கோட்பாடுகளிளும், மரபுகளிளும், உறுதியாக நின்று இலக்கியம் படைத்தனர்.  அக்காலத்து கிராமிய மரபுகளை தமது கவிகளில் படம் பிடித்தனர். 
இத்தகைய கிராமிய கவிஞர்கள் வாயிலாக ஏற்படுகின்ற சமுதாயப்பயன்பாடு மிகவும் பெறுமதிவாய்ந்தது. அவர் தமது கவிகள் பண்பாட்டு அம்சங்களின் பதிவேடுகளாக பயன்படுத்தத்தக்கவை. 
19ம் நூற்றாண்டில் புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்த தௌ;ளப்பா செய்கு இஸ்மாயில் புலவர் பற்றிய இவ்வாய்வு நூல் புலவரைப்பற்றி மற்றுமன்றி அக்காலப்பகுதிக்குரிய பண்பாட்டு நெறிகளை பற்றிய ஆய்வாகவும் அமைந்துள்ளமை சிறப்பாக குறிப்பிடக்கூடியதாகும். 
கிராமிய இலக்கியங்களின் ஊடாக சமுதாய பண்பாட்டு அம்சங்களையும், கலை இலக்கிய ஊற்றுக்களையும் இனங்காண முயலும் பேராதனைப்பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் முயற்சிகள் விதந்து கூறத்தக்கவை. 
தற்கால இஸ்லாமிய சிந்தனை எனும் நூலுக்கான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் முன்னுரை

நவீனத்துவ நோக்கில் தற்கால இஸ்லாத்தை விளங்கிக்கொள்வதற்கான ஆழமான தகுந்த எழுத்துக்களை ஆய்வு மாணவர் பெறுவது எவ்வாறு என்பது பிரச்சினைக்குரியதாகும். இஸ்லாம் ஒரு சமயம் என்பதுடன் நாகரீகம், பண்பாடு, அரசியல், கருத்தியல், பகுத்தறிவு என்ற மனித வரலாற்றின் பன்முக இயக்கங்களையும், சிந்தனைகளையும் கொண்டிருப்பதனால் இம்முயற்சி கடினமானதென்பது தெளிவு இந்நூல் தற்கால இஸ்லாத்தை எவ்வாறு விளங்குவது என்பதோடு தற்கால சூழமைவில் இஸ்லாமியச் சிந்தனை செல்நெறி, இஸ்லாமிய ஆய்வறிவின் இயல்பு, அதன் மெய்யியல் மற்றும் சமூகமயப்பட்ட பயன்பாடு பற்றிய பரிசீலனை என்ற இலக்கை குவிமையப்படுத்தியுள்ளது.
தற்காலச் சிந்தனை மற்றொரு பரினாமத்திற்கு மாறும் காலகட்டத்தில் அதனுடன் தொடர்பு பட்ட 200 வருட காலத்தை பற்றிய பரிசீலனை பயனுள்ளது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததுமாகும். இவ்விருநூறு வருட காலத்துக்குள் புதிய சிந்தனை தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ள பல விளைவுகள் உள்ளன. ஆனால் அது எல்லா நிலையினரையும் சென்றடையவில்லை. இலங்கை மற்றும் தென்னிந்திய சூழலில் இதன் தாக்கங்கள் போதிய முன்னேற்றத்தை பெறவில்லை. 
சில அடிப்படையான சொல்லாடல்கள் பற்றிய பிரக்ஞை கூட வசப்படாத நிலை சமய அறிவாளிகள் மத்தியிலும் காணப்படுகின்றது. மாற்றத்தைப்பற்றிய கருத்து ஒரு முஸ்லிமை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. வரலாற்றிலும், வாழ்விலும் மையமாய் இயங்கும் அதன் சூற்சுமத்தை இஸ்லாத்திலிருந்து யாரும் அவனுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அல்லது அத்தகைய கல்வி பயிற்சிகளிலிருந்து ஒரு முஸ்லிம் அந்நியப்படுத்தப்படுகிறான். 
11 – 12 ம் நூற்றாண்டுகளிளும் பின்னர் 19 – 20 ம் நூற்றாண்டுகளிளும் இவ்விடயத்தை முஸ்லிம் மெய்யியலாளர்களும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் பேசினர். இந்நூலின் மையப்பிரச்சினை இதிலிருந்துதான் தொடங்குகிறது. 
இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள சுமார் 15 சிந்தனையாளர்களும், சமய சீர்திருத்த வாதிகளும் அவர்களின் பொதுவான வரலாறு, சமயப்பங்களிப்பு என்பதற்கு அப்பால் சமயவியலிலும், சிந்தனையிலும் ஏற்படுத்திய முன்னேற்றத்தினை அல்லது பிரச்சினைக்குரிய கருத்துக்களை விசாரனை செய்வதும் விமர்சிப்பதும் இந்நூலின் நோக்கங்களில் ஒன்றாகும். 
இஸ்லாத்தில் நவீனத்துவக்கருத்துகள் பேசப்பட்ட சந்தர்ப்பங்களில் அவை சரியாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் பாத்திர முக்கியத்துவம் வாய்ந்த அதன் சிந்தனைக்கூறுகளும், அதன் ஆற்றலும் கை நலுவிச்செல்ல அனுமதிக்கப்பட்டன. 
மாற்றம் எனும்போது சமயத்தின்  எல்லா மூலவிதிகளையும், மூலக்கிரியைகளையும் பற்றிய விடயமல்ல அது மூல விதிகளின் மூலக்கிரியைகளின் நிலைப்பாடு நிர்ணயகரமானவை  ஒரு சமயத்தி;ல் உறுதித்தன்மையும், தனித்துவமும், அதிலுள்ளது. ஆனால் சிந்தனைகள், கருத்துகள், கொள்கைகள், செல்நெறிகள் வௌ;வேறு நோக்குகளை பிரதிபலிக்கின்றன. புத்தாக்கத்திற்கு உள்ளாகின்றன. 
சில நெருக்கடிகளின் போது சமயத்தின் பழமையையும், பொற்கால உணர்வுகளையும் மீட்சிக்குள்ளாக்கும் சமய இயக்க நடவடிக்கைகள் முதன்மை நிலைக்கு வருகின்றன. அப்போதும் அங்கு பழமையின் உண்மையான பிரதியாக அன்றி இயக்கங்களின் இலட்சியங்களுக்கு ஏற்றதாகவே அவை வடிவமைக்கப்படுகின்றன. அதாவது புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன. 
இது எவ்வாரெனினும் சமுதாய மாற்றத்துடனும், வரலாற்று இயக்கப்போக்குடனும், ஒத்திசைவைக்காணும் சவாலுக்கு சமயங்கள் முகங்கொடுப்பது மனித நாகரீக வரலாறு முழுக்க நிகழந்துள்ளது. இது சாத்தியமாகாத போது சமய உட்பிரிவுகளோ அல்லது புதிய சமயமோ உருவாகிறது. சமுதாய இயக்கப்போக்கையும், முன்னேற்றத்தையும் கருத்திற்கொள்ளாது போனால் அங்கு தேக்கநிலையோ மனித செயற்பாட்டில் பங்களிப்பற்ற சூனிய நிலையோ தோன்றலாம்.
சமயச்சீர்திருத்தமும், மறுமலர்ச்சியும் சமய கட்டமைப்பினதும், கலாசார இயக்க கூறுகளினதும் தேவையான இசைவாக்கச்சக்தியாக செயற்படுகின்றன. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த 20 ம் நூற்றாண்டின் முற்பாதிவரை இப்பண்பைக்காண முடியும். எனினும் இது இலகுவானதல்ல. முரண்பட்ட கருத்துகளின் மோதலை சீர்திருத்தம் சந்திப்பதை இக்கால கட்டத்தில் காண முடியும்.
மனித சமூகத்தை பழைய நிலமானிய சமூகக்கட்டமைப்பிலிருந்தும், பழங்குடி கலாசாரத்திலிருந்தும் விடுவிக்கும் செயற்பாடு இஸ்லாமிய பேரரசு ஆட்சிகள் நடந்த பின்னரும், தேவையானதாக இருந்தன. இஸ்லாமிய ஆட்சி நடந்த நிலப்பரப்பிக்குள்ளேயும் கூட இது தேவையாக இருந்தது. 
முஸ்லிம் உலகம் அதன் நவீனத்துவ வாத தொடர்பை 19 ஆம் நூற்றாண்டிலேயே பெறுகிறது. பழைய சமுதாயக்கட்டமைப்பிற்கு உரியதாகவிருந்த சமய ஒழுங்கு முறைகள், மரபுகள், மூலாதாரங்களின் உண்மைத்தன்மைகள், வேத விளக்கங்கள் ஆகியவற்றில் பழைமைக்கொள்கைகள் கைவிடப்பட்டன. அல்லது மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டன. முன்னரே சில முன்னறிவுப்புகள் காணப்பட்ட போதும் ஸேர் ஷெய்யித் அகமத்கான், ஜமாலுத்தீன் ஆப்கானி, ஷெய்யித் முஹம்மத் அப்து, ஆகியோர் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புதிய யுகத்துக்கான சீர்திருத்த நோக்கிற்குள் கொண்டுவந்தனர். 
19ம் நூற்றாண்டின் இந்த விளைவு முஸ்லிம் சிந்தனையில் ஏற்பட்ட பரடைம் ஆகும். அதாவது பழைமைவாத மரபுகளும், தொன்மைச்சமய நோக்கும், பழைய வாழ்க்கை இலட்சியங்களும், கேள்விக்குரியதாக்கப்பட்டன. பழைய கருத்துகளிடத்திற்கு புதியவை வந்து சேர்ந்தன. 
இயற்கையியலை அல்லது அறிவியல்களைப்படிப்பது தேவநிந்தனை அல்லது இறைமறுப்பு என்ற கோசம் ஆரம்ப இஸ்லாத்திலோ, வரலாற்று இஸ்லாத்திலோ காணப்படாதது. இஸ்லாத்தின் பூர்வீக நிலையில் ஆ;ன்மீகமும், சட்டமும், வாழ்வின் முழுமையையும பரஸ்பர உறவையும் கொண்டிருந்தது. அதனால் தீவிர மரபுவாத சமய போதகர்கள் கூட நபி முஹம்மத் (ஸல்) அவர்களை சமய வாதியாக மட்டுமன்றி உலக வாழ்வின் பல்வேறு பகுதிகளை, அதாவது உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றவராக சொல்லிப்பெருமை கொண்டனர். ஆயினும் அப்போதகர்களுடைய ஆன்மீக நோக்கு அறிவியல் எதிர்ப்பாகவும், உலக மறுப்பாகவும் அதற்கு எதிர்த்திசையிலேயே செல்கிறது. அறிவியலை மறுமையின் பேரில் அழித்தொழிப்பதற்கும் அவர்கள் ஆயத்தமாக இருந்ததற்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன. 
நபிகளின் வாழ்வு கூறும் உண்மை என்னவென்றால் ஆன்மீகமாகவா, உலகியலாகவா அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை விட அவர்கள் மனிதனாய் வாழ்ந்து உலகப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்ககூடிய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பும் வழியைக்காட்டினார்கள். பூமியில் வாழவும், இயற்கையுடன் போராடவும் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் மனிதன் கற்கவேண்டியுள்ளான் என்பதைக் குர்ஆன் ஆதரிக்கிறது. எனினும் இஸ்லாமிய பேரரசுகள் வீழ்ந்து சமய நிருவனங்களும் இயக்கங்களும் ஆதிக்கத்திற்கு வந்த போது தீவிர வைதீக வாதிகள் அறிவியலையும், அறிவையும் எதிர்த்தனர். 
கிருஸ்தவ ஆதிக்கம் மேலோங்கியிருந்த மத்திய காலத்தில் விஞ்ஞானிகள் தலைமறைவாக வாழ்ந்தனர், பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஏவ்வாறாயினும் இஸ்லாம் இந்த நெருக்கடியைச்சமாளிக்க சக்தி பெற்றிருந்தது. ஆன்மீக அதிகார வல்லமையை மீறி அறிவியலுக்கும், அறிவுக்கும் 11-12 நூற்றாண்டுகளில் இஸ்லாம் ஆற்றிய சேவை இன்று அதன் உலக நாகரீக பங்களிப்பாக பிரகாசிக்கின்றது.
1970 க்குப் பின்னர் அறபு - இஸ்ரேல் போரும் அறபு நாடுகளின் நவ புத்தியுர்ப்புவாத எழுச்சியும் இலங்கை முஸ்லீம்களின் புத்துயிர்ப்பு வாத எழுச்சியை நோக்கி திசைமுகப்படுத்தும் சக்திகளாக மாறின. 

No comments:

Post a Comment