Monday, December 26, 2011

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சில பசுமையான நினைவுகள்

             பேராசிரியர் அனஸ் யான் விரும்பும் பேராசிரியர்களுள் மிக மிக முக்கியமானவர். இவருடைய எச்.எஸ்.இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு எனும் நூல் யான் வாசித்த முதலாவது ஆய்வு நூலாகும். அன்றிலிருந்து எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுடைய ஆதர்ஸ வாசகனானேன். அவர் எழுதும் நூல்களை தேடிப்படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. சுமார் 25 நூல்களை எழுதியுள்ளார். என்னிடம் 20 நூல்கள் உள்ளன. இவர் ஆய்வு, பல்கலை எனும் சஞ்சிகைகளையும் வெளியிட்டவர். இவ்வாறு அந்த வரலாறு தொடர்ந்து செல்லும். 
பேராசிரியர் அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதிர்ஸ்டவசமாக 2002ம் ஆண்டு பேராதனையில் நடந்த முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடான 'அல் இன்சிராஹ்' சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது. இதில் முக்கியமான விடயம் சகோதரர் எம்.எம்.எம்.சமீம் இந்த சஞ்சிகையினுடைய இதழாசிரியர் என்பது சற்று அழுத்த வேண்டிய விடயமாகும். இந்நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி பிரதம சொற்பொழிவாற்றினார். சஞ்சிகை விமர்சன உரையை கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் நிகழ்த்தினார். அன்று முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆழமான நட்புனர்வுண்டு. 
அவர் ஆற்றிய நூல் விமர்சனம் இன்றும் எனது காதிலே கேட்கின்றன. யான் ஏன் கூறுகிறேன் என்றால் அந்த விமர்சனம் மிக மிக ஆழமான தனக்கே உரிய பாணியில் உரை நிகழ்த்தப்பட்டது. இன்னும் பேசமாட்டாரா என்ற ஏக்கம் மண்டபத்திலிருந்த எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்குப்பின்னர் பல தடவைகள் பேராதனையில் சந்தித்திருக்கிறேன், வீட்டுக்குப் போயிருக்கிறேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையான நினைவுகளாகும். 
அவரது அழகையும், அறிவையும், பேச்சையும் யான் வெகுவாக விரும்புகின்றேன். அவருடைய சிந்தனைகளால் வெகுவாக கவரப்பட்டுள்ளேன். பேராசிரியர் அனஸ் அவர்கள் எனக்கு மெய்யியல் பேராசிரியராக யான் பார்க்கவில்லை பல துறைகளையும் கற்ற ஞானியாகவே காட்சி தந்தார். அவர் ஒவ்வொருவரைப்பற்றியும் பேசும் போது அவர்களே எங்கள் முன் காட்சி தருகின்ற உணர்வு ஏற்படும். அந்த அளவு அனஸ் அவர்களுடைய அறிவு மிக மிக அகன்ற ஆழமான பார்வை உண்டு எனபதே என்னுடைய மதிப்பீடாகும். முஸ்லிம் சமூகத்தின் கல்வி,பொருளாதாரம், அரசியல், வரலாறு, பண்பாடு, கலாசாரம் போன்ற துறைகள் மீது அவர் கொண்டுள்ள அக்கரை தனியான விசேட கவனிப்புக்குரியதாகும். 
பேராசிரியர் அனஸ் சுமார் ஆறு மாதகாலமாக (2011.05ம் மாதம் – 11ம் மாதம் வரை) கணடாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுகளுக்காக சென்று மீண்டும் இலங்கை வந்துள்ளார். (தென்கிழக்காசிய முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு) இந்த ஆய்வு மிக விரைவில் நூலாக வெளிவரும் அனஸ் அவர்களுடைய நூல்களுக்கு தனியான மவுசு உண்டு. இலங்கையில் மட்டுமன்றி தமிழ் பேசும் உலகிலும் பேசப்படுகின்ற ஒருவராவார். அவர் இன்னும் பல ஆய்வு நூல்களை வெளியிட வேண்டுமென்பதே அவரைச்சார்ந்தவர் என்ற முறையில் யான் விடுக்கும் அறைகூவலாகும். 
அறைகூவல்கள் அனைத்தும் சந்தர்ப்பங்களாகும். பேராசிரியர் அனஸ் அவர்களோடு 2011.12.23 சகோதரர் ஜே.எம்.நௌசாத்தோடு இருக்கும் பொழுது தொடர்பு கொண்டேன். உலகலாவிய அன்மைக்கால விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நீண்ட காலத்திற்குப்பின்னர் அந்த குரலைக்கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆஹா ஆஹா எவ்வளவு அழகும், இனிமையும், அறிவும், ஞானமும் நிறைந்த கருத்துக்கள் இன்னும், இன்னும் கேட்கவேண்டுமென்ற ஆசையும், ஆதங்கமும். உள்ளத்தில் ஏற்படுத்திற்று.
அனஸ் அவர்களுடைய ஆளுமையில் பெரும் செல்வாக்குச்செலுத்தியவர்கள் பேராசிரியர்களான கைலாசநாதன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, சி.சிவசேகரம் போன்றவர்கள் மிக மிக முக்கியமானவர்களாகப்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் கல்வி வரலாற்றில் மிக முக்கியமானவர்களாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி மரணமடைந்த சந்தர்ப்பத்தில் அனஸ் அவர்கள் நாட்டில் இருக்கவில்லை. அவ்வேலை கனடாவில் இருந்தார். சிவத்தம்பியுடைய மரணம் அனஸ் அவர்களுக்கும் பாரிய இழப்பாகும். சிவத்தம்பி அவர்களும், அனஸ் அவர்களும் நீண்ட காலமாக உறவாக இருந்தனர். அனஸ் அவர்கள் கொழும்புக்குச்செல்லும் போதெல்லாம் சிவத்தம்பி அவர்களுடைய வீட்டுக்கு செல்லுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். சிவத்தம்பி அவர்களும் அனஸ் அவர்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார் என்பது யான் ஊடாடிய சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார்கள். சிவத்தம்பி அவர்களைப்பற்றி பலர் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டார். பேராசிரியர்களான எம்.ஏ.நுஃமான், சோ.சந்திரசேகரன், எம்.எஸ்.எம்.அனஸ், சபாஜெயராசா, எம்.ஏ.எம்.சுக்ரி போன்ஆறார்கள் மிக முக்கியமானவர்கள். அனஸ் அவர்களும், சிவத்தம்பி அவர்கள் மீது அளவு கடந்த அன்போடு இருந்தார்கள் என கருதுகின்றேன். அனஸ் அவர்கள் சிவத்தம்பியினுடைய தமிழ்ப்பனிகளைப் பாராட்டியிருக்கிறார்கள், அவருடைய இழப்பு அனஸ் அவர்களை மட்டுமல்ல, எங்களையும் வெகுவாக வாட்டுகிறது. 
இலங்கை முஸ்லிம்களுடைய கல்வி வரலாற்றில் தற்போது பேசப்படுபவர்களான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, பேராசிரியர்களான எம்.ஏ.எம்.நுஃமான், எம்.எஸ்.எம்.அனஸ் போன்றவர்களை யான் அதிகமாக விரும்புகின்றேன். 
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒருவர். அதே போன்று கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களும் அனஸ் அவர்கள் மீது அன்பும் பற்றும் உள்ள ஒருவராவார்.

ஞானியுடனான உறவு ஞானியாக்கும்.

No comments:

Post a Comment